இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
கடைசி யுத்தம் நடந்து முடிந்த கடைசி நாளான 18 மே மாதம் 2009ம் ஆண்டு பாதர் சறாவும் அவருடன் இருந்த 4 குருக்களும் 80 வரையான சிறுவர்களும் எனையவர்களும் பங்கரில் இருந்து வெளியில் வந்தார்கள். பலவிதமான விசாரணைகளுக்கு பின் அவர்கள் போக அனுமதிக்கப்பட்டார்கள். வழியில் கண்ட பல காட்சிகள் சறாவின் மனதை வெகுவாக பாதித்தது. அவருடன் நடந்தவர்களில் ஒருவர் சொன்னார்: பாதர் சறா “இதை என்னால தாங்க ஏலாமல் இருக்கு” என்று பல தடவைகள் சொல்லியபடியே பாரமான தனது பைகளையும் சுமந்து வந்தார். ஏனெனில் பல மனித உடல்களின் நடுவேயும் பல எரிந்து கொண்டிருந்த இடங்களினூடாகவுமே இவர்கள் நடந்துவர வேண்டியிருந்தது.
சறத்ஜீவன் 1968ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பிறந்தார். அவர் சிறு வயதிலிருந்தே தான் ஒரு குருவாக வரவேண்டும் என்று ஆவலாய் இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட குடும்ப பொறுப்புக்கள் காரணமாக, 1993ம் ஆண்டிலே குருமடத்தில் இணைந்து 2003ம் ஆண்டு மே 14ம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
முல்லைத்தீவில் உதவிப் பங்குத்தந்தையாக 2004ம் ஆண்டு பணியாற்றிக் கொண்டிருந்த போது 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமிப் பேரவலத்தில் தனது உடமைகள் அனைத்தையும் இழந்தார். அவர் பணியாற்றிய பேதுருவானவர் ஆலயம் உட்பட அவரது அறைவீடும் சுனாமி அனர்த்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டது. அருட்தந்தை சறாவும், அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனும் புனித சூசையப்பர் சுருபம் இருந்த இடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்துக்கொண்டு இருந்ததால் பல மக்களுடன் இவர்களும் காப்பாற்றப்பட்டார்கள். அருட்தந்தை சறா, அங்கிருந்த ஒரு சில குருக்களோடு இணைந்து இறந்தவர்களை ஆசீர்வதித்து அடக்கம் செய்வதிலும் ஏனைய மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். சுனாமி அனர்த்தத்தின் பின்னர் மாமூலை என்னும் இடத்தில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்திலுள்ள மண்டபத்தில் பல வசதிக்குறைவுகளுடனும் தங்கியிருந்து அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றினார். பெப்ரவரி மாதம் 2004ம் ஆண்டு மாமூலைக்குச் சென்று அவரை பார்த்த போது, அவரின் பணியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. 75 அடி ஆழமான கிணற்றிலிருந்தே அவருக்கும், அங்கு வந்து தங்கிநின்று மக்களுக்கு பணியாற்றிய அருட்சகோதரர்களுக்கும், சமையலுக்கும் தேவையான நீரை விடியற்காலையில் எழும்பி தானே தொட்டியை நிரப்புவார். தன்னலமற்று பிறரின் தேவைகளை உணர்ந்து, அதைச் செய்யும் மனப்பக்குவம் சறாவிடம் நிறையவே இருந்தது. எதையும் அன்போடுதான் செய்வார். எந்த கடினமான பணியென்றாலும் அதனை மனமுவந்து நிறைவேற்றுவார்.
கடைசி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலில் இருந்தபோது உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. மக்களோடு மக்களாக கியூவில் நின்று தன்னுடன் இருந்தவர்களுக்காக உணவை அவர் பெற்றுக்கொண்டதாக அதனை நேரில் பார்த்த பெண் என்னிடம் தெரிவித்திருந்தார். பங்கரில் வாழ்ந்த நாட்களில் எல்லோரையும் உறங்கவிட்டு தான் மட்டும் நித்திரை கொள்ளாமல் விழித்திருந்ததாக அவருடன் இருந்த சிறுவன் ஒருவன் என்னிடம் சொன்னார். சறா பாதரினால் தான் தாங்கள் உணவு உண்டதாக அவருடன் இருந்த பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். வெளியில் உணவு வாங்குவதற்காக செல்லும் முன் “மன்றாடுங்கள் உணவு கிடைக்கவேண்டும்” என்று அங்குள்ள பிள்ளைகளிடம் சொல்லிவிட்டுச் சென்று, உணவுப்பொருட்களுடன் சறா திரும்பி வருவார். பலத்த செல் வீச்சுகளுக்கு மத்தியிலேயே அவர் உணவுதேடச் செல்ல வேண்டிய நிலையிருந்தது. எல்லோரும் உணவு உண்டுவிட்டார்கள் என்று உறுதிசெய்த பின்னரே, பாதர் சறா மிகுதியாக ஏதாவது இருந்தால் தான் உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
சில தடவைகள் தான் நான் அவருடன் உரையாட அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அழைப்பை பெறுவதும் மிகவும் கடினமான செயலாகத்தான் இருந்தது. கடவுள் அருளால் நாங்கள் மிகவும் குறுகிய நேரமாவது தொடர்பு கொள்ள முடிந்தது. ஒரு முறை அவருடன் கதைத்தபோது, “அக்கா என்னை வரச் சொல்லி பிஷப்பிடம் (ஆயரிடம்) கேட்டாயா?” என்று கேட்டார். நான்சொன்னேன் “இல்லை சறா, நான் கேட்கவில்லை” என்று. அவர் அதற்குச் சொன்னார் “அக்கா நான் மக்கள் வரும்போது மக்களுடன் தான் வருவேன். பிஷப்பிடம் எதுவும் கேட்கவேண்டாம்”. நான் சொன்னேன் “சறா உன்னுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம்”. எப்போது கேட்டாலும் அங்குள்ள ஆபத்தான நிலைகளை சொல்ல மாட்டார். தான் சுகமாக இருப்பதாகத் தான் சொல்லுவார். சறா மிகவும் உறுதியாக இருந்தார் – மக்களுடனேயேதான் வெளியில் வருவேன் என்று, - மக்களை விட்டு வருவதற்கு சறா ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை.
அவருடன் வந்தவர்களில் ஒருவர் சொல்லிய சம்பவங்கள் இவை. ஒருமுறை இடம்பெயர்ந்து உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, பாதர் சறா அவர்களிடம் சென்று அவர்களிடம் இருந்த பெற்றோல் கானை வீசும்படியாகச் சொல்லியிருக்கிறார். சிறிது தூரம் பயணித்ததன் பின்னரும் பாதர் சறா மீண்டும் சென்று பெற்றோல் கானை வீசிவிட்டீர்களா? என்று கேட்டு அதனை தூர வீசச் செய்திருக்கிறார். அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போதே எறிகணை ஒன்று அதன் மேல் வீழ்ந்து, அது தீப்பிடித்து எரிவதை அவர்கள் பார்த்தார்கள். பாதர் சறாவின் அறிவுரையால் தாங்கள் காப்பாற்றப்பட்டதை அவர் விபரித்தார்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில், பலத்த எறிகணை வீச்சு நடந்து கொண்டிருந்த போது, அவர்களில் ஒரு சில பிள்ளைகள் மதிலின் அருகில் பதுங்கியிருந்தார்கள். அப்போது மதில் உடைந்து வீழ்ந்து விட்டது. ஏறிகணை வீச்சு சிறிது ஓய்ந்ததும், எல்லோரும் கடந்து செல்ல முற்பட்டபோது பாதர் சறா மட்டும் அந்த உடைந்து கிடந்த மதில் கற்களை அகற்றவேண்டும் என்று பிடிவாதமாக கேட்டுக்கொண்டு, அவற்றை அகற்றியபோது, ஒரு சில பிள்ளைகள் அந்த இடிபாடுகளுக்கிடையில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டார்கள்.
இறுதி நாட்களில் பல நாட்களாக உணவோ தண்ணீரோ அவர்களுக்கு கிடைக்கவில்லை, குறைந்தது கடைசி 3 நாட்கள் சிறிதளவும் கிடைக்கவில்லை. அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தபோது, செம்பு ஒன்றில் ஒருவருக்கு சிறிதளவு நீர் கிடைத்தது. அவர் அதிலே குடித்து விட்டு, களைத்துப் போயிருந்த பாதர் சறாவிற்கும் குடிக்க கொடுத்தார். அப்போது சறா கேட்டது “நீ குடித்து விட்டாயா?”. அவர் ‘ஓம்’ என்று சொன்னதன் பின்னNர் பாதர் சறா அதனைக் குடித்ததாக சொன்னார். சறாவிற்கு எப்போதும் மற்றவர்கள் நலனில் தான் அக்கறை அதிகம், தன்னுடைய வருத்த துன்பங்களை, தன்னுடைய தேவைகளை ஒருபோதும் முன்னிலைப்படுத்தியது கிடையாது. சறா ஒர் அபூர்வப் பிறவி. அதனால்தான் என்னவோ பலருடைய உள்ளங்களில் இன்னும் நினைவுபடுத்தப்படுகிறார்.
கடைசி நாள், 18ம் திகதி மே மாதம், அவர்கள் அனைவரும் பங்கரில் இருந்து வெளியே வந்ததன் பின்னர், அங்கு நின்றவர்களின் அனைத்து சோதனைகளையும் முடித்து, தொடர்ந்தும் நடந்துகொண்டிருந்தார்கள். 4 கிலோ மீற்றர் அளவு தூரம் பாதர் சறாவும் ஏனையவர்களும் தகிக்கும் வெயிலிலும், எரியும் வாகனங்கள் கட்டிடங்களின் ஊடாகவும் இறந்த உடல்களின் ஊடாகவும் நடந்தார்கள். பாதர் சறா வெறுங்காலுடன்தான் தனது பாரமான பைகளையும் சுமந்து நடந்தார். அவரிடம் Nஐ.ஆர்.எஸ் நிறுவனத்தின் அனைத்து கணக்குகளும் முக்கியமான பொருட்களும் இருந்தன. ஒரு கட்டத்தில் நெஞ்சு வலியால் தடுமாறத் தொடங்கினார். அப்போது அவருடன் நடந்து வந்த இரு இளைஞர்கள் அவரிடம் இருந்த பைகளை வாங்கிக்கொண்டனர். 12 மணியளவில் தொடர்ந்து நடக்கமுடியாமல் இருந்ததால், ஒரு மரத்தடியில் பாதர் சறாவை இருத்தி வைத்தார்கள். சுயநினைவற்ற நிலையிலிருந்த பாதர் சறாவை சிறிது நேரத்தின் பின்பே டிறாக்ரர் ஒன்றில் ஏற்றி அவர்கள் சாளம்பர் என்ற இடத்திற்கு அழைத்துசெல்ல முடிந்தது. அங்கு ஒழுங்கான மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. சேலைன் மட்டும் ஏற்ற முடிந்தது. பாதர் சறாவை ஒரு இளைஞன் மடியில் வைத்திருக்க, 3 சேலைன் ஏற்றிய பின்பு 4வது சேலைனை ஏற்றிக்கொண்டிருந்த போது, பாதர் சறாவின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்ததாக அந்த இளைஞன் குறிப்பிட்டார். தான் அதனை துடைத்து விட்டதாகவும் சொன்னார். அதன் பின்பு, ஒரு சிறு மூச்சோடு பிற்பகல் 3.00 மணியளவில அவரின் உயிர்; அவரை விட்டு பிரிந்தது. ‘தமிழ் மக்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்’ என்று தன்து சுயநினைவற்ற நிலையிலும் கண்ணீர் விட்டாரா என்று எண்ணத்தோன்றுகிறது. “எங்களுடைய மக்களுக்கு இனி என்ன நடக்கும்?” என்பதுவே பாதர் சறாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதனை அவருடன் இருந்த சகோதர குருக்களிடமும் கேட்டுள்ளார்.
12.06-2014 அன்று அருட்தந்தை ஒருவரைச் சந்தித்தேன், சறாவின் பெயரால் பாதர் சறத்ஜீவன் நிதி உதவித் திட்டத்தை தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டேன். அவர் உடனே சொன்னார்.
“பாதர் சறா என்றும் வாழ்வான்”. தொடர்ந்தும் அவர் கூறினார், பாதர் சறாவின் உடலை தான் பஸ் மூலம் வவுனியாவிற்கு கொண்டு வந்து நீதிவானிடம் கையளித்ததாக.
யாழ்ப்பாணம் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் தாங்கள் கொண்டுவந்ததாக சொன்னார். தாங்கள் முகாமில் இருந்த போது பாதர் சறாவின் உடலை
தகனம் செய்ததை கேள்விப்பட்டு தானும் இன்னுமொரு அருட்தந்தையும் மிகவும் அழுததாக குறிப்பிட்டார். பத்து நாட்களுக்கு மேல் வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு
கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மலர்ச்சாலையில் பாதர் சறாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. விமானம் மூலம் கொண்டு வருவதற்கு பல முயற்சிகள் செய்தும்,
கொண்டு வர முடியவில்லை. பாதர் சறாவின் கல்லறை யாழ்ப்பாணத்தில் இருந்தால்தான் நாங்கள் சென்று தரிசிக்க முடியும் என்ற காரணத்தினால் உடலைக் கொண்டுவர
முடியாத நிலையில், தகனம் செய்து அஸ்தியைக் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டது. 26ம் திகதி மே மாதம் 2009ம் ஆண்டு பாதர் சறாவின் உடல் தகனம் செய்யப்பட்டு
28ம் திகதி அஸ்தி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அருட்சகோதரி ஒருவர் அதை கொண்டுவந்தார். ஆயரின் செயலராக அப்போது இருந்த
அருட்தந்தை ரொஷான், அருட்தந்தை சறாவின் உடலை வவுனியாவிலிருந்து பொறுப்பெடுத்ததில் இருந்து தகனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
பாதர் சறாவின் அஸ்தி 30ம் திகதி மே மாதம் 2009ம் ஆண்டு யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 18ம் திகதி நான் அங்கு
சென்று மெழுகுதிரிகள் கொழுத்தி பாதர் சறாவிடம் மன்றாடுவது எனது வாழ்வில் ஒன்றாகிவிட்டது. சறா என் அன்புத் தம்பி என்னுடன் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.
அருட்தந்தை ஒருவர் சொன்னது போல பாதர் சறா என்றுமே வாழ்வார்.
- நித்திலா மரியாம்பிள்ளை
சாம்பலாக
தாயாரின் கைகளில்
சிலையாக
மக்கள் மனதில்
என்றும் கிறீஸ்துவின் பாதையில்
FaceBook: Fr.Sarathjeevan Foundation
Contact by post:
Fr. Sarathjeevan Foundation