Fr. Sarathjeevan

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று பல நல்ல உள்ளங்களின் உதவியுடன் இந்த நிதியம் போரினால் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் துயருறும் மக்களுக்கு உதவி வருகிறது.

Sara

நான் சந்தித்திராத மா மனிதர் சறத்ஜீவன்

(வன்னி மண்ணிலே நடந்த கொடிய யுத்தத்தின் இறுதிவரை மக்களுக்காகப் பணிபுரிந்து யுத்தத்தின் கடைசி நாளன்று 'இதை என்னால தாங்கமுடியாமல் இருக்கு' என்று மாரடைப்பினால் உயிர்நீத்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளாரின் 8ம் ஆண்டு நினைவாக இக்கட்டுரை அமைகிறது.)

ஆக்கியவர்: திரு. அல்பிரேட் ஞானராஜ்

மே 13 சரத்ஜீவன் அடிகளாரின் பிறந்த நாள் ஆகும்.

அருட் தந்தை சரத்ஜீவன் அடிகளாரை என்றுமே நேரில் சந்திக்காதது மட்டுமல்ல அடிகளாரோடு நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ தொடர்பில்லாத நிலையில் வாழும் நான் எதனைப் பதிவுசெய்ய முடியும்?

எனினும், அடிகளாரோடு சிறிது காலமென்றாலும் வாழ்ந்துள்ள மொன்றியல் மீட்பின் அன்னை மறைத்தள முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அடிகளார், மற்றும் இரணைப்பாலை புனித பாத்திமா முன்பள்ளி ஆசிரியை, செல்வி செலஸ்தீன் ஆகியோருடனான உரையாடலில் சேகரித்த தகவல்களது தொகுப்பினை எனது பதிவாக இதன் கீழ் தருவதில் பெருமிதம் அடைகின்றேன்.

சுதந்திரம் என்பது ஒவ்வொரு ஜீவராசியினதும் உயிர்மூச்சு எனக்கற்றறிந்தவர்கள் மட்டுமல்ல, விலங்குகளுமே நன்கறியும் - உயிர்மூச்சு அடக்கப்பட்டு – ஒடுக்கப்பட்டு - உரிமைகள் பறிக்கப்பட்டு - ஓரங்கட்டப்பட்ட மக்கள் தமது உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் வெற்றி கண்டதும், இன்றும் போராடிக்கொண்டு இருப்பதும் பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வாழும் மனிதன் நன்கறிவான்.

இயலாமையாலும், ஆற்றாமையாலும் அடிமைத்த னத்திலேயே ஒடுங்கி வாழ்ந்த மக்கள் விடுதலை பெற பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, தம்மையே அர்ப்ப ணித்து உடல், பொருள், ஆவியை தியாகம் செய்தவர்க ளுக்கு இறைவனின் துணையும், உதவியும் கிடைத்ததை எவரும் மறுக்க முடியாது.

எமது தாயகத்தில் 2009 மே மாதத்தில் இடம்பெற்ற இறுதி யுத்த காலத்தில் போராளிகளும், அரச படையினரும் தமது தனிப்பட்ட நோக்கம், குறிக்கோள் என்பவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதாபிமான அடிப்படையில் சக மனித உயிர்களைக் காப்பாற்ற மனித உணர்வோடு செயல்பட்டிருந்தால், எத்தனையோ அப்பாவி உயிர்கள் அநியாயமாகவும், அவலமாகவும் இறப்பதிலிருந்து தடுத்திருக்கலாம் என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

இறுதி யுத்த காலத்தில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது - அந்த வெகு சிலரில், தனது மந்தையின் குரலை நன்கறிந்த ஆயர்களில் ஒருவராக நான் மதிக்கும், எனது வாழ்வில் நான் என்றுமே சந்தித்திராத யாழ் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை சரத்ஜீவன் மரியாம்பிள்ளை அடிகளார் என்று சொன்னால் அது மிகையாது.

2009 மே 18 பொழுது கரைந்து கொண்டிருந்த நேரம், கந்தகப் புகையும், நெருப்பும் படிப்படியாக மறைந்து, மனித அலறல்களும், ஒப்பாரிகளும் மூச்சடங்கி, ஆங்காங்கே ஓரிரண்டு வெடி குண்டு ஓசைகளின் மத்தியில், புரியாத மொழியில் மனிதக் குரல்கள் கேட்ட வேளையில், “கஞ்சிக் கொட்டில்கள்தான் எமக்குத் தஞ்சம், பட்டினிச் சாவின் விளிம்பில் நிற்கிறோம்“ என முள்ளிவாய்க்காலிருந்து அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளாரது குரல் கேட்டதாக கடந்த 2009.05.10ம் திகதிய பாதுகாவலன் பத்திரிகையில் வந்த முன்பக்கச் செய்தி என்னை உலுக்கியது.

பாபிலோனில் அடிமைப்படுத்தப்பட்டு துயருற்ற மக்கள் சிந்திய கண்ணீரும், கதறிப் புலம்பியதையும் திருப்பாடல் 137ஐப் படிக்கும் எவரது இதயமும் கசிந்துருகும் - இறுதி யுத்த நாட்களில், சாதாரன அற்ப மனிதனான நானும் அவ்வாறான நிலையில், “அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளார் யார்?“ என்ற வினாவோடு மொன்றியல் மீட்பின் அனை மறைத்தளத்தில் அருட்தந்தை யூட் அமலதாஸ் செபஸ்தியாம்பிள்ளை அடிகளாரிடம் விபரம் அறிந்து கொண்டேன்.

எமது தாயக மண்ணில் தொடரும் விடுதலை வேள்வியின் மத்தியிலும், தமது குருத்துவ மேய்ப்புப்பணி ஆர்வத்தால், தம்மையே ஆகுதியாக்கிய அருட்பணியாளர்கள் வரிசையில், இறுதிப்போரின் இறுதி நாள்வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து நோயாளியாகி சரத்ஜீவன் அடிகளார் உயிர்துறந்ததாக அறிந்து வேதனை அடைந்தேன்.

எல்லாம் வல்ல இறைவன் ஒரு தாயின் கருவறை யிலிருந்தே மனித இனத்தின் பரம்பலை வகுத்திருக்கின்றார் - அவ்வாறே சரத்ஜீவன் என்ற குழந்தை, தனது ஆரம்ப உடல், உள வளர்ச்சியினை தாயார் திருமதி கசில்டா மங்களநாயகி அம்மையாரி டமிருந்து பெற்றிருப்பது முதிர்வயதிலும் அம்மையாரது அசையாத, ஆழமான விசுவாச உணர்விலிருந்து காணக்கூடியதாகவுள்ளது.

ஆரம்ப வளர்ச்சியை குழந்தைப் பருவத்திலிருந்து சிறுவன் சரத்ஜீவன் தனது தகப்பனார் முன்னாள் ஆசிரியர் திரு,மரியாம்பிள்ளை அவர்களிட மிருந்து பெற்றிருப்பார் என்பது எனது அசையாத நம்பிக்கை யாகும் - இதனால், ஆசிரியப் பெருந்தகை அமரர் திரு.மரியாம்பிள்ளை கசில்டா மங்களநாயகி தம்பதியினர் இறை வழிநடத்துதலோடு தமது பிள்ளைச் செல்வங்களை வளர்த்தெடுத்துள்ளனர் என்பது கண்கூடு.

இறைவனையே முற்றுமுழுதாக நம்பியிருந்த குடும்பத்திலிருந்தே 5பிள்ளைகளில் மூத்த மகளான மரினா அருட்சகோதரியாக தனது வாழ்வை திருச்சிலுவைக் கன்னியர் சபைக்கு அர்ப்பணிக்க, இளைஞன் சரத்ஜீவனும் இறை திருவுளத்தால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்பதனை அறிந்து பெருமிதம் அடைந்தேன்.

அன்றைய இறைவாக்கினர் ஏசேக்கியேல் போன்று, அருட்தந்தை சரத் ஜீவன் அடிகளார் பணியாற்றிய உருத்திரபுரத்திலுள்ள ஆலயம் இடிக்கப்பட்டு, மக்களும் அகதிகளாக்கப்பட்ட நிலையில், அகதிகளோடு அகதிகளாக பங்கருக்குள் வாழ்ந்தாலும், அடிகளார் அழிவுகளிலின் மத்தியிலும் நெஞ்சு உரத்தோடு, தலைநிமிர்ந்து நின்று இறைபணி ஆற்றினார் என்பது உண்மை - தனது பங்கையும், பங்கு ஆலயத்தையும் இழந்த நிலையிலும் அவரிடமிருந்த இறை விசுவாசத்தையும், அன்னை மரியா மீதான நம்பிக்கையையும் இழக்கவில்லை.

கொடிய பயங்கரத்தின் மத்தியிலும் திருப்பலி ஒப்புக்கொடுப்பதிலும், மக்களை பங்கருக்குள் ஒன்றுசேர்த்து செபமாலை செபிப்பதிலும் ஈடுபட்டதனை, இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அவரோடு உடனிருந்த இரணைப்பாலை புனித பாத்திமா முன்பள்ளி ஆசிரியை செல்வி செலஸ்டீன் மூலமாக அறிந்து இவ்வாறான ஒரு இறை ஊழியரை நேரில் சந்திக்க முடியவில்லையே எனக் கவலைப்படுகிறேன்.

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் தாயகம் வந்தபோது, அருட்தந்தை சரத்ஜீவன் அடிகளாரது தாயாரிடம் எங்களை இருதடவைகள் அழைத்துச் செல்ல உதவிய அருட்தந்தை செ.அன்புராசா (அ.ம.தி.) அவர்களது அன்புப் பணியையும் நன்றியோடு பதிவு செய்ய விழைகின்றேன்.

ஒரு சிலரது சுயநலமே பலரது இன்னல்களுக்கு மூல காரணமாயிருப்பதனால், சுயநலம் மனிதனின் இரத்தத்தோடு இரண்டறக்கலந்து இன்றைய நுகர்ச்சிக் கலாச்சார உலகில், பல்வேறு சவால்கள், போராட்டங்க ளுக்கு மத்தியில் கொடிய யுத்த காலத்தில் இறை ஆன்மீகத்தை வளர்ப்பதில் அல்லும் பகலும் அரும்பாடு பட்டு, இறுதிப்போரின் இறுதி நாள் வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து, கொல்லும் வெடி குண்டுகளுக்கு மத்தியில் பங்கரிலும், வெய்யிலின் அகோரத்தின் களைப்பிலும், பசியிலும், கவலையிலும், நோயாளி யாகி இந்தக் கொடுமைகளை என்னால் தாங்க முடியாதென சரத்ஜீவன் அடிகளார் உயிர்துறந்ததாக அறிந்து வேதனை அடைந்தேன்.

உலகெங்கிலும் தமது சமூக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுத் தம் இனிய, அரிய உயிர்களை இழந்த மா மனிதர்களில் வரிசையில் அருட்தந்தை சரத் ஜீவன் அடிகளாரும் போற்றப்பட வேண்டும்.

அருட்தந்தையின் பெயரால் நடாத்தப்படும் சரத்ஜீவன் அறக்கொடை நிதியத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அறப்பணிகள் இன்னமும் பலரது ஆதரவுடன் முன்னேற்றமடைய ஆசிக்கின்றேன்.

எல்லாம் வல்ல இறைவன் வானக வீட்டில், அருட்தந்தை சரத் ஜீவன் அடிகளாரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியை வழங்கியருள, பூவோடு சேர்ந்த நாராக எனது மனைவி, மற்றும் பிள்ளைகளது குடும்பத்தாரோடு இணைந்து நமதாண்டவர் இயேசுவிடம், அன்னை மரியாள் வழியாக வேண்டுதல் செய்கின்றோம்.

அருட்பணி சரத் ஜீவன் அடிகளாரோடு இறுதிக்காலங்களிலே வாழ்ந்த அருட்பணி ஸ்ரிபன் அடிகளார் பாதுகாவலன் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரை

2009 மே 18ம் திகதி எங்களின் செவிகளில் எட்டிய அருட்பணி சராவின் மரணச் செய்தி எமக்கு ஒரு பேரிடியாக இருந்தது. மாண்டுபோன அப்பாவி மக்களின் கல்வாரியாக இருந்த முள்ளிவாய்க்காலில் இவரின் சிலுவை சுமப்பும் மரணமும் பலிக்குருத்துவத்தின் தடங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை வரைகின்றது. “இறுதி முடிவுவரை மக்களுடன் நிற்பேன்” என்று அடிக்கடி இவரின் வாயினின்று வந்த வார்த்தைகள் இவரின் இறை அனுபவத்தின் ஆழத்தை எமக்குக் காட்டி நின்றது. கண்ணுக்கு முன்னால் மக்கள் அணுவணுவாக துடிதுடித்து மாண்ட போது இறைப்பணியாளர்களின் பிரசன்னமும் உடனிருப்பும் இம் மக்களுக்குத்தேவை என்று இவரது மனதில் எழுந்த எண்ணம் இவரது இறை அன்பின் ஒரு வெளிப்பாடாக இருந்தது.

அருட்பணி சரத் ஜீவன் பலரது உள்ளங்களில் இடம் பிடித்த ஒருஇறை பணியாளன் எதையும் நல் மனத்தோடு ஏற்றுக்கொள்ளும் துணிவு கொண்டவர். உருத்திரபுரத்தின் பங்குக்குருவாக பணியாற்றிக்கொண்டிருந்த போது வன்னி மறைக்கோட்ட யேசுசபை அகதிகள் பணி நிறுவனத்தின் இயக்குனராகவும் கடமை புரிந்தவர். இடம்பெயர்வின் ஆரம்பகாலங்களில் தன்னால் இயன்ற பணியை மக்களுக்கு முழுமையாக ஆற்றியவர்.

வறிய மாணவர்களின் கல்வியில் அக்கறை கொண்டவராக மாலை நேர வகுப்புக்களும் முன்பள்ளிகளும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயற்பட்டு அவை நடைபெறும் இடங்களை நேரடியாக சென்று கண்காணித்து குறைநிறைகளை அறிந்து அவைகளுக்கு உரியவற்றை செய்து நின்றவர். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நேரடியாக வவுனியாவிற்கு சென்று கொள்முதல் செய்து பொருட்கள் மிகவும் தட்டுப்பாடான காலத்திலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதில் இவரது பங்கு இருந்தது.

உருத்திரபுர மக்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்ட போது அந்த பகுதியில் வாழ்நத மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த பிற்பாடு அந்த இடத்தை விட்டு இறுதி மனிதனாக இவர் வெளியேறியது எல்லோர் மனங்களிலும் அழியாத இடத்தைப் பிடித்தது. இவரின் பணி 2008 புரட்டாதி மாத இறுதிப்பகுதியில் வட்டக்கச்சி பிரதேசத்தில் கல்மடு என்னும் இடத்தில் பல வசதிக் குறைபாடுகள் மத்தியிலும் தடங்கலின்றி நடைபெறத் தொடங்கியது. ஆன்மீகப்பணியோடு தன்னால் இயன்ற சமூகப்பணியையும் நிறைவாக மக்களுக்கு ஆற்றிக்கொண்டிருந்தார்.

கல்மடு, வட்டக்கச்சி பகுதிகளிலும் யுத்தத்தின் சத்தங்கள் கேட்கத் தொடங்க தனது பணியிடத்தை மூங்கிலாறு, உடையார்கட்டு பகுதிக்கு குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளிக்குள் மாற்றிக்கொண்டார். ஒருசில தடவைகள் அகோர எறிகணைத்தாக்குதல்களுக்குள் சிக்குண்டு பயங்கரமான அனுபவங்களை பெற்றுக்கொண்டார். இதனை மற்றவர்களுடனும் பகிர்ந்துள்ளார். மூங்கிலாறு பிரதேசத்தில் இவர் ஆற்றிய நிவாரணப்பணி மிகவும் முக்கியமானது. பொருட்கள் தட்டுப்பாடான காலத்தில் அவற்றை பொதிசெய்து மக்களுக்கு விநியோகித்து உன்னத பணி ஆற்றினார். இவர் மிகவும் இரக்கு சுபாவம் கொண்ட ஒரு இறைபணியாளர்.

அதற்கு பிற்பாடு சுதந்திரபுரம், இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என மக்களோடு சேர்ந்து இடம்பெயர்ந்து தனது இருப்பால் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தி மக்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். முகம் கோணாமல் எதற்கும் துணிந்தவராக பலவிதமான வேலைகளை செய்தார்.

வன்னி மறைக்கோட்ட குருக்கள் எல்லோரும் வலைஞர்மட ஆலயத்தில் தஞ்சமடைந்த வேளையிலே இவரும் அங்கு இருந்தார். மக்களின் வாழ்விடங்கள் மிகவும் குறுகிய நிலையில் நாற்புறமும் யுத்தத்தால் சூழப்பட்ட போது பதுங்கு அகழிகளை விட்டு வெளியே நடமாடுவது உயிராபத்தான விடயமாகவிருந்தது.

அந்தக்காலத்தில் வீதியினால் பயணிப்பவர்கள் திடீரென நடத்தப்படும் எறிகணைத்தாக்குதலிலும் துப்பாக்கி சூட்டாலும் கொல்லப்படும் நிலையிலும் கூட இவர் உறுதியோடு பயணித்தார். வெளியில் பயணிக்கும் போது தான்் மரணிக்க நேர்ந்தால் வெள்ளை அங்கியுடன் மரணிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த இவர் ஒருபோதும் வெள்ளை அங்கி அணியாமல் வெளியே செல்ல மாட்டார்.

மக்கள் வலைஞர் மடம், மாத்தளன் பகுதிகளில் கடற்றொழில் செய்ய ஏதுவான சூழ்நிலை இருந்த வேளையில் இவர் அதிகாலையில் எழுந்து அங்குள்ள குருக்களுக்கு மீன் வாங்குவதற்காக கடற்கரைக்கு சென்று அங்கு மக்கள் படும் துன்பங்களை கண்டு வேதனைப்படுவார்.

2009 ஆண்டு பரிசுத்த வார வழிபாடுகள் வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெற்றது. வலைஞர் மடத்தில் அநேகமாக குருக்களும் அருட்சகோதரிகளும் வழிபாடுகளை மக்களுக்காக ஒழுங்குபடுத்தினார்கள். இரட்டைவாய்க்கால் செல்வது மிகவும் உயிராபத்தான விடயமாக இருந்தாலும் இரண்டு அருட்பணியாளர்களுடன் தானாக முன்வந்து தானும் சென்று அந்த மக்கள் பரிசுத்தவார வழிபாடுகளில் முழுமையாக பங்குகொள்ள மிகவும் உதவியாக இருந்தார்.

மே 13 புனித பற்றிமா அன்னையின் பெருவிழா அத்தோடு அந்த நாள் அவருடைய பிறந்தநாள். இதனால்தான் என்னவோ தேவதாய் மீது இவர் அதீத பக்தி கொண்டவர். .மூன்று தடவைகளுக்கு மேலாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலில் சிக்குண்ட போதெல்லாம் கைகளில் செபமாலை ஏந்தி தொடர்ச்சியாக பல செபமாலைகள் சொல்லி மற்றவர்களையும் செபிக்கத் தூண்டி மரியன்னையின் அடைக்கலத்தில் தன்னோடு இருந்தவர்களை ஒப்படைத்து எல்லாரையும் காப்பாற்றினார். தொடர்ச்சியாக பல நூற்றுக்கணக்கான எறிகணைகள் தம்மைச் சுற்றி விழும்போது நிதானமாக இருந்து மக்கள் பயத்தால் கதறி அழும்போது “அழ வேண்டாம் அழுவதனால் பயனில்லை செபமாலையைக் கைகளில் ஏந்தி செபமாலை சொல்லுங்கள்” என அறிவுறுத்தி உரத்த குரலில் செபமாலை செபிக்க ஆரம்பிப்பார். அகோர தாக்குதலின் மத்தியிலும் அழுகுரல்கள் அடங்கி எல்லோருடைய நாவும் அன்னைமரியாளின் நாமத்தை உச்சரிக்க புதுமை அங்கு நடைபெறும். மே 17 இரவு முழுவதும் செபமாலையைக் கையில் ஏந்தி செபித்துக்கொண்டிருந்தார்.

யுத்தம் இறுதிக்கட்டத்தை அண்மித்த அந்த இறுதி நாள்களில் மரண பயம் எல்லோரையும் சூழ்ந்து நின்ற வேளையிலும் மரணத்தைக் கண்டு இவர் அஞ்சவில்லை. மரணத்திலும் உறுதியாக இருந்தார். நாற்புறமும் இராணுவம் .சூழ்ந்து நின்ற வேளையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் படி 2009 மே மாதம் 17ம் திகதி மாலை வேளையில் இரண்டு குருக்களோடும் ஒரு சில பிள்ளைகளோடும் வெள்ளைக் கொடியுடன் இரண்டு தடவைகள் சம கால இடைவெளியில் இராணுவத்தை எதிர் கொண்டு செல்ல முற்பட்ட போது இவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 18ம் திகதி காலை வேளையில் மீண்டும் ஒரு தடவை வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தை எதிர்கொள்ள முயற்சித்தபோது இவரும் துணிவுடன் அந்த முயற்சியில் ஈடுபட்டார். “தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவுமில்லை” (யோவா.15:13) என்கிற இறைவார்த்தை அவரது உள்ளத்தில் ஓங்கி ஒலித்ததன் பிரதிபலிப்பு இந்த சம்பவத்தில் நிரூபணமாகியது. இறுதியாக இந்த முயற்சி வெற்றியடைந்தது.

அங்கு இருந்தவர்கள் விசாரணை செய்யப்பட்ட விதம், இவர் தாக்கப்பட்ட சம்பவம் போராட்டத்தின் எதிர்பாராத அந்த முடிவு இவரது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவைகள் எல்லாவற்றினதும் தாக்கம் இவரது இதயத் துடிப்பை படிப்படியாக குறைத்திருக்க வேண்டும். எரியும் சுவாலைகளுக்கு மத்தியில் வெறுங்காலுடன் பல நூறு மீற்றர் மனப்பாரத்தோடு நடந்த இவரது உடல் படிப்படியாக சோரத் தொடங்கியது. இவர் சுமந்து வந்த பொருட்களடங்கிய இரண்டு பொதிகளை இவருடன் வந்த ஒருவர் பெற்றுக்கொள்ள இன்னும் இரண்டு பிள்ளைகள் இவரைக் கைத்தாங்கலாக சுமக்க முற்பட்டபோது அவர் கூறிய “என்னால் முடியும் நான் தனிய நடந்து வருவேன்” என்ற வார்த்தைகள் இறுதி நேரத்திலும் இவரது மனவுறுதியைக் காட்டி நின்றது. நீங்கள் எங்கள் அடிமைகள் என்று அங்கு ஒலித்த ஏளன குரல்களுக்கு மத்தியில் நண்பகல் 12.30 மணியளவில் இரட்டைவாய்க்கால் என்கின்ற இடத்தில் இவரது உடலின் இசைவாக்கம் படிப்படியாக குறைந்துபோக இன்னும் சிலருடன் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓர் உழவு இயந்திரத்தில் இவரும் ஏற்றப்பட்டு சாளம்பர் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு மதியம் 2.45 மணிக்கு அவரது இதயமும் தனது துடிப்பை நிறுத்த கனத்த இதயத்தோடு இவ்வுலகை விட்டு அகன்று போனார்.

அருட்பணி சறத் ஜீவன் குருத்துவத்தில் புதியதோர் அத்தியாயம். இறைநம்பிக்கையில் வேர் ஊன்றி மரியன்னையின் பராமரிப்பில் இறைபணி புரிந்த ஓர் இறைபணியாளன். மக்கள் பணி புரிந்து புன் சிரிப்புடன் மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு மாமனிதன், வரலாற்றில் உன் தடங்கள் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும்.

முள்ளிவாய்க்கால் முடிந்த இடமல்ல
நீ விடுதலைக்காய் வித்தான இடம்
காற்றோடும் கடலோடும் மண்ணோடும்
உன் மக்கள் கரைந்துபோக
உன்னையும் நீ கரைத்துகொண்ட இடம்
இறுதிவரை உறுதியாக இருந்தாய்
மக்களையும் மண்ணையும்
அதிகமாய் நேசித்தாய்
அதனால் தான் என்னவோ
விடுதலைக்கு வித்தான
வீரர்களோடும் மக்களோடும்
முள்ளிவாய்க்காலில்
நீயும்
இறை இயேசுவிற்கு சாட்சியானாய்...........

நீ எப்போதும் வாழ்வாய் எம் தமிழ் மொழியும் இரத்த சாட்சிய திருச்சபையும் வாழும் வரை…

ஆக்கியவர்: அருட்பணி. பாலதாஸ் பிறையன்

சறாக்குட்டி !!
இப்படித்தான் சிறிய, பெரிய
குருமடங்களில் இவர்
அழைக்கப்பட்டார்.
அந்தப் பெயர் இவர்
குருவாக வந்த பின்னும் தொடா;ந்தது…
உடம்பு கொஞ்சம் பெரிது தான்
மனமும் உணா;வும் குழந்தை தான்…
முகம் கொஞ்சம் மொத்தம் தான்…
செல்வாக்கான கண்கள் உண்டு…
மொத்தத்தில் கொஞ்சம் ஒழுங்கற்ற உடம்பில்
ஒழுங்கான அன்பின் படைப்பு…
இது சறாக்குட்டியின் வெளித்தோற்றம்.
பிஞ்சு மனம் வெள்ளை உள்ளம்
கொஞ்சும் மொழியில் கள்ளமில்லா வார்த்தைகள்
மிஞ்சும் கலைத்துவம் கொள்ளை கொள்ளும் இசை ஆற்றல்
கெஞ்சும் உணர்வுகள் வெள்ளம் போல வாழ்க்கைப் பாடம்
அத்தனையும் ஒருங்கே அமையப்பபெற்ற அன்பின் வடிவம்.
ஞாபகப்படுத்தினேன்!! ஒரு நாள் பெரிய குருமடத்தில்
விளையாட்டு விழா
இரண்டு இல்லங்கள் எட்றியன், பொன்னையா
சறாவும் நானும் எட்றியன் இல்லம் இன்னும் பலரோடு
வினோத உடை நிகழ்வு முதல் இடம் எடுக்க வேண்டும்
ஆயத்தப்படுத்தினோம் சறாவை இரண்டாம் வகுப்பு
பிள்ளை போல நீலக் காற்சட்டை, வெள்ளை சேட்டு,
அலுப்பினாத்தி குத்தி சேட்டிலே ஒரு லேஞ்சி
றிங்ஸ் போத்தலுக்குப் பதிலாக பெரிய பெப்சி போத்தல்
அதன் மூடிக்குப் பதிலாக சூப்பி ஒண்டு
சப்பாத்து மேசும் காலில் போட்டு
பின்னுக்கு கொழுவும் பாக்கு ஒன்றும்
விறகு கொண்டுவரும் வண்டிலில்
ஏற்றி வந்தோம் சறாவை பத்துப் பேர்
வண்டிலை இழுத்தும் வந்தோம்….
நடுவர்கள் விழுந்து சிரிக்க
சறாக்குட்டி சூப்பியாலே பெப்சி குடிக்க…
வினோத உடையில் எமது இல்லம்
பெற்றது முதலாம் இடம்!
ஞாபகப்படுத்தினேன்!!
எம் தொடர் உறவின் பயணத்திலே
2008ம் 2009ம் ஆண்டுகள்
மறக்க நினைத்தாலும் முடியாதவை…
அந்தக் கொடூரமான நாட்களின்
கசப்பான தருணங்களை எப்படி சொல்வது…
2008 நவம்பர் 01 ல்
சறாக்குட்டியை சந்தித்தேன்.
“பயப்படாதே இயேசு நம்மோடு இருக்கிறார்.
எமது இனத்தோடும், சனங்களோடும் இருக்கிறார்.”
இது இவரின் முதல் வார்த்தை என்னைக் கண்டதும்
தெளிவான, தெம்பான வார்த்தைகளை
எப்போதுமே சொல்லி திடப்படுத்துவது
இவரின் பிறவிக்குணம்.
2009ல் உக்கிரமடைந்தது போர்…
வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் குண்டு மழை
படிப்படியாக நில ஆக்கிரமிப்பு
இறப்புக்களின் நிலை மிக அருகிலே இருந்தது…
எதுவும் செய்ய முடியாமல் தவித்த வேளை
வன்னி அகதிப்பணியின் இயக்குனரான இவர்
தன்னிடமிருந்த அத்தனையையும் மக்களோடு
பகிர்ந்து கொண்டார்.
இருந்தோம் இரணைப்பாலையில்
இருக்க முடியவில்லை
சாவுகளைக் கண்டு கண்டே
சலிப்படைந்து விட்டது உள்ளமும் மனமும்
சறாவுக்கு நானும் எனக்கு சறாவும்
அவஸ்தை கொடுத்துக் கொண்டோம்…
அப்போது கூட …
“பயப்படாதே இயேசு கைவிடமாட்டார்
நாங்கள் தோற்க மாட்டோம்”
இது தான் அவரின் வார்த்தைகள்…
பயங்கரங்கள் அருகிலே மிக அருகிலே தெரிய
இடம் பெயர்ந்தோம் வலைஞர் மடம் நோக்கி
அங்கே செபமாலை மாதா கோவில்
எல்லோரும் போய்ச் சேர்ந்தோம்…
சறாவும் நானும் ஒரு சிறிய தகரக் கொட்டில் போன்ற
ஒரு இடத்தில்…
ஒரு கட்டில், ஒரு பாய், உடுப்பு பாக்கே எங்கள் தலையணை,
சறா பாயுடன் கீழே நான் பாயில்லா பலகையில்
உறக்கமில்லாத இரவுகள்…
செபமாலையை கையிலே வைத்துக் கொண்டு
விழித்திருப்போம் எப்போதும்…
அப்போது தான்…
நான் ஞாபகப்படுத்துகின்றேன்!!
சறா அடிக்கடி நெஞ்சை பிடிப்பதை…
“என்ன சறாக்குட்டி நெஞ்சுக்க நோகுதா?”
என்று கேட்டேன்.
“இல்லையடா! நாங்க தோக்கப்ப போறம் போல கிடக்கு
சனமும் சாகுது, எங்களுக்கு ஒண்டும் இல்லாம
போகப் போகுதடா !!”
என்று கூறிக் கொண்டே தனது நெஞ்சைப்
பிடிப்பார் இதயப் பக்கத்திலே…
வெளுத்துப் போன கண்களுடனும்
களைத்துப் போன உடம்புடனும்
சளைத்துப் போன மனதுடனும்
சறாவைக் காண்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இறுதியில் முடிவுக்கு வந்தது யுத்தம்
ஏராளமான மக்களைக் காணவில்லை
உயிரற்ற உடல்களினாலே நிரம்பியது வன்னி
பார்க்கும் இடமெங்கும் செத்துப்போன எம் உறவுகள்
கண்களை மூடிக் கொண்டு
நெஞ்சை அழுத்திப் பிடித்தோம்…
அப்போது தான் அந்த மாபெரும்
அன்பின் பொக்கிஷத்தை !!
சறாக்குட்டியை இழந்தோம்…
மக்களுக்காகவே வாழவும் சாகவும் துடித்த
அந்த மகான்…
தன் இனத்து மக்களோடு தன்னையும்
கரைத்துக் கொடுத்தான்…
சரித்திரமானான்…
சறா…
நீ வாழ்கிறாய் எம் இதயத் துடிப்பில்
நீ வாழ்கிறாய் எம் விடுதலை உணவுர்களில்
நீ வாழ்கிறாய் எம் தேசத்தின் தென்றல்களில்
நீ வாழ்கிறாய் எம் அன்பின் பயணங்களில்
நீ வாழ்கிறாய் எம் தியாகத்தின் இருப்புக்களில்
நீ எப்போதும் வாழ்வாய் எம் தமிழ் மொழியும்
இரத்த சாட்சிய திருச்சபையும் வாழும் வரை…
உன்னை ஞாபகப்படுத்தியது
நண்பன்
பாலதாஸ் பிறையன்

முள்ளிவாய்க்கால் கல்வாரியில் விதையாகிய குருத்துவ விருட்சங்கள்: அருட் பணி :- சரத்ஜீவன், அருட் பணி :- பிரான்சிஸ் யோசப்

ஆக்கியவர்: அருட்பணி. அன்ரன் ஸரீபன்

2009 மே 18 பொழுது கரைந்து கொண்டிருந்த நேரம், கந்தகப் புகையும், நெருப்பும் படிப்படியாக மறைந்து கொண்டிருந்த நேரம், மனித அலறல்களும் ஒப்பாரிகளும் மூச்சடங்கியிருந்த நேரம். ஆங்காங்கே ஓரிரண்டு துப்பாகி வெடி ஓசைகளும், புரியாத மொழியினரின் ஏழனக் குரல்களும், நையாண்டிகளும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த நேரம். போர் எல்லைகளைத் தாண்டி நீண்ட வரிசையில் நின்று, நிர்வாணமாக்கப்பட்டு, உடல் பரிசோதனை செய்யப்பட்ட அவமானத்தோடும் பசி, தாகம், களைப்பு, சோர்வு, ஏமாற்றம் என்ற பெரும் உடல் மனப்பாரத்தோடும் நின்ற எம்மை முள்ளிவாய்க்கால் எல்லையிலுள்ள இரட்டைவாய்க்கால் சாளம்பன் என்ற இடத்தில், யுத்தத்தில் உயிர் தப்பிய இறுதி மனிதர்களின் கூட்டத்தில் ஒலித்துக் கொண்டிருந்த; ''சாரா பாதர் செத்திட்டார்'' என்ற ஒப்பாரிக் குரல்கள் ஒருமுறை நிலைகுலையச் செய்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருடைய கண்களும் நீரால் நிறைந்திருந்தது. ''காலமை எங்களோட வந்த பாதர் இப்ப எங்களை விட்டுட்டு போட்டார்'' என்று எல்லோரும் அங்கு ஒலித்த அதிகாரக் குரல்களுக்கும், வெருட்டல்களுக்கும் மத்தியில் அழுது குழறிய வண்ணம் இருந்தார்கள். ''இப்பத்தான் பாதரின் சடலத்தை பஸ்ஸில கொண்டு போகினம்'', ''எங்களை விட்டுட்டு பாதர் போட்டார்'' என்று அழுகுரல்கள் நீண்டு கொண்டே போனது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. அந்த இடத்தில் ஒருசிலரில் குரல்களையும், வெற்றி அக்களிப்பையும் தவிர ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. இறுதிவரை மக்களுடன் நிற்பேன் என்ற உறுதியான முடிவுடன், இறுதி வரை நின்று முள்ளிவாய்க்கால் கல்வாரிக்குள்ளே தன்னுடைய சுவாசத்தை கரைத்துக் கொண்டவர் அருட் பனி சரத்ஜீவன் அடிகளார்.

உலகப் பந்தின் ஒரு சிறிய புள்ளியிலே மனிதம் நொருக்கப்பட்டு, சிலுவை சுமத்தப்பட்டு, இழப்புக்களையும், மரணங்களையும், அங்கவீனங்களையும் சேமித்துக் கொண்டு கந்தகப் புகைக்குள் வாழ்வியலைத் தேடிய போது, இறை பணியாளரின் பிரசன்னமும் உடனிருப்பும் அவசியமானது என்ற உண்மையைப் புரிய வைத்து, எண்ணிக்கையில்லாமல் மாண்டுபோன தமிழர்களின் மரணத்தோடு தன்னையும் உத்தம குருவாக இயேசுவின் வழியில் பலியாக்கியவர் இவ் அருட்பணியாளர். அரச சார்பற்ற உள்நாட்டு - வெளிநாட்டு நிறுவனங்கள் யுத்தப் பிரதேசத்தில் இருந்து அரசினால் வெளியேற்றப்பட்ட பின்னர் யுத்தத்தின் சுடுகலன்கள் மக்களை நோக்கி திருப்பப்பட்டன. மக்களின் இழப்புக்கள் வரையறைகளைத் தாண்டி செல்ல ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில், யுத்தப் பிரதேசத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் இருப்பு அரசினால் விரும்பப்படாத ஒன்றாக கருதப்பட்டது. இதன் விளைவாக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த கத்தோலிக்க அருட்பணியாளருக்கு அரசினால் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற பகிரங்க அழைப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆனாலும் ஒருசில குருக்கள் இறுதிவரை மக்களுடன் இருப்போம் என்ற உறுதியான முடிவெடுத்தார்கள். அவர்களில் ஒருவர் அருட்பணி சரத்ஜீவன் அடிகளார்.

இவ் அருட்பணியாளர் பலரது உள்ளங்களில் அழியாமல் இடம்பிடித்த ஒரு இறைபணியாளர். எதையும் நல் மனத்தோடு ஏற்றுக் கொள்ளும் துணிவு கொண்டவர். உருத்திர புரத்தின் பங்குக் குருவாக பணியாற்றிக் கொண்டிருந்த போது, வன்னி மறைக் கோட்ட இயேசு சபை அகதிகள் பணி நிறுவனத்தின் இயக்குனராகவும் கடமை புரிந்தவர். 2008ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யுத்தம் கிளிநொச்சி நகரை அண்மித்த போது, உருத்திரபுர மக்களுக்கும் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வேளையில் இறுதி மனிதராக இவரும் வெளியேறினார். இக்காலப்பகுதியில் இவரின் பணி வட்டக்கச்சி பிரதேசத்தில் கல்மடு என்னும் இடத்தில் வசதி குறைபாடுகள் மத்தியிலும் தடங்கலின்றி நடைபெறத் தொடங்கியது.

ஆன்மீகப் பணியோடு தன்னால் இயன்ற சமூகப் பணியையும் மக்களுக்கு ஆற்றிக் கொண்டிருந்தார். கல்மடு, வட்டக்கச்சியை யுத்தம் அண்மித்தபோது, இவர் தனது பணியிடத்தை மூங்கிலாறு உடையார்கட்டு பகுதிக்கு குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளிக்குள் மாற்றிக் கொண்டார். ஒருசில தடவைகளில், அகோர எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டு பயங்கரமான அனுபவத்தை பெற்றுக்கொண்டார். மூங்கிலாறுப் பிரதேசத்தில் இவர் ஆற்றிய நிவாரணப் பணி மிகவும் முக்கியமானது. பொருட்கள் தட்டுப்பாடான காலத்தில் அவற்றை சேகரித்து, பொதி செய்து அவற்றை மக்களுக்கு விநியோகித்து உன்னத பணியாற்றினார். இவர் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர். சுதந்திரபுரம், உடையார்கட்டு, இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என மக்களோடு இடம்பெயர்ந்து, தனது இருப்பால் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். முகம்கோணாமல் எதற்கும் துணிந்தவராக பலவிதமான உதவிகளைச் செய்தார்.

வன்னி மறைக்கோட்ட குருக்கள் எல்லோரும் வலைஞர்மட ஆலயத்தில் தஞ்சமடைந்த வேளையில், இவரும் அங்கு இருந்தார். மக்களின் வாழ்விடங்கள் மிகவும் குறுகிய நிலையில் நாற்புறமும் யுத்தத்தால் சூழப்பட்ட போது, பதுங்கு அகழிகளை விட்டு வெளியில் நடமாடுவது உயிராபத்தான விடயமாக இருந்தது. அந்த நாட்களில் வீதியினால் பயணிப்பவர்கள் திடீரென கொல்லப்படும் நிலமையிலும் கூட, இவர் உறுதியோடு பயணித்து தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர். வலைஞர்மடம், மாத்தளன் பகுதிகளில் மக்கள் கடற்றொழில் செய்ய ஏதுவான நிலை இருந்த வேளையில், இவர் அதிகாலையில் எழுந்து கடற்கரைக்குச் சென்று அங்கு மக்கள் படும் துன்பத்தைக் கண்டு வேதனைப்படுவார்.

2009ஆம் ஆண்டு பரிசுத்த வார வழிபாடுகள் வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெற்றன. வலைஞர்மடத்தில் குருக்களும், சகோதரிகளும் வழிபாடுகளை மக்களுக்காக ஒழுங்கு படுத்தினார்கள். இரட்டைவாய்க்கால் செல்வது உயிராபத்தான விடயமாக இருந்தாலும் இரண்டு அருட்பணியாளர்களுடன் தானாக முன்வந்து, அங்கு சென்று அந்த மக்கள் பரிசுத்தவார வழிபாடுகளில் முழுமையாக பங்கு கொள்ள மிகவும் உதவியாக இருந்தார்.

மே 13ஆம் திகதி அவருடைய பிறந்தநாள்; புனித பற்றிமா அன்னையின் பெருவிழா; இதனால் என்னவோ தேவமாத மீது இவர் அதீத பக்தி கொண்டவர். மூன்று தடவைகளுக்கு மேலாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களில் சிக்குண்ட பொழுதெல்லாம், கையில் செபமாலையைத் தாங்கி தொடர்ச்சியாக பல செபமாலைச் சொல்லி, மற்றவர்களையும் செபிக்கத்தூண்டி மரியன்னையின் அடைக்கலத்தில் தன்னோடு இருந்தவர்களை ஒப்படைத்து எல்லோரையும் காப்பாற்றினார்.

ஒருமுறை உடையார்கட்டு பகுதியில் எறிகணைகள் விழ, மக்கள் தூய யூதாததேயு ஆலயத்தை நோக்கி ஓடி வந்து அங்கு தஞ்சமடைந்தார்கள். எறிகணைத்தாக்குதல்கள் மிக அகோரமாக உடையார்கட்டு புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஆலயத்தில் தஞ்சமடைந்தவர்கள் ஒப்பாரி வைத்து குழறத் தொடங்கினார்கள். கண்களுக்கு முன்னால் மக்கள் காயமடைந்தும் , இறந்து கொண்டும் இருந்தார்கள். அந்த வேளையில் அருட்பணி சரத்ஜீவன் நிதானமாக இருந்து ''அழ வேண்டாம்! அழுவதனால் பயனில்லை, செபமாலையை கைகளில் ஏந்தி செபமாலையைச் சொல்லுங்கள்'' என அறிவுறுத்தி உரத்த குரலில் செபிக்க ஆரம்பித்தார். அகோரத்தாக்குதல்கள் மத்தியிலும் அழுகுரல்கள் அடங்கி எல்லோருடைய நாவும் அன்னை மரியாளின் நாமத்தை உச்சரிக்கும் புதுமை அங்கு நடைபெற்றது. மே 17ஆம் திகதி இரவு முழுவதும் செபமாலையைக் கையிலேந்தி செபித்துக் கொண்டிருந்தார்.

யுத்தம் இறுதிக்கட்டத்தை அண்மித்த இறுதி நாட்களில் மரணபயம் எல்லோரையும் சூழ்ந்து நின்ற வேளையிலும் மரணத்தைக்கண்டு இவர் அஞ்சவில்லை. மரணத்திலும் உறுதியாக இருந்தார். நாற்புறமும் இராணுவம் சூழ்ந்து நின்ற வேளையிலும் மரணத்தைக்கண்டு இவர் அஞ்சாது தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் படி 2009 மே 17ஆம் திகதி மாலை, இரண்டு குருக்களோடும், ஒரு சில பிள்ளைகளோடும் வெள்ளைக் கொடியுடன் இரண்டு தடவைகள் சமகால இடைவெளியில் இராணுவத்தினரை எதிர் கொண்டு செல்ல முற்பட்டபோது இவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 18ஆம் திகதி காலை வேளையில் மீண்டும் ஒருதடவை வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தை எதிர்கொள்ள முயற்சித்த போது, இவரும் துணிவுடன் அந்த முயற்சியில் ஈடுபட்டார். ''தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவுமில்லை'' (யோ 15:13) என்கின்ற இறைவார்த்தை அவரது உள்ளத்தில் ஓங்கி ஒலித்ததன் பிரதிபலிப்பு இந்த சம்பவத்தில் நிருபணமாகியது. இறுதியாக இந்த முயற்சி வெற்றியடைந்தது.

அங்கு இருந்தவர்கள் விசாரணை செய்யப்பட்ட விதம், இவர் தாக்கப்பட்ட சம்பவம், போராட்டத்தின் எதிர்பாராத அந்த முடிவு இவரது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இவைகள் எல்லாவற்றினதும் தாக்கம் இதயத்துடிப்பை படிப்படியாகக் குறைத்திருக்க வேண்டும். எரியும் சுவாலைகளுக்கு மத்தியில் வெறுங்காலுடன் பல நூறு மீற்றர் மனப்பாரத்தோடு நடந்த இவரது உடல் படிப்படியாக சோரத் தொடங்கியது. இவர் சுமந்துவந்த பொருட்களடங்கிய இரண்டு பொதிகளை இவருடன் வந்த ஒருவர் பெற்றுக் கொள்ள, இன்னும் இரண்டு பிள்ளைகள் இவரை கைத்தாங்கலாக சுமக்க முற்பட்ட போது, அவர் கூறியது '' என்னால் முடியும், நான் தனியே நடந்து வருவேன்'' என்ற வார்த்தைகள் இறுதி நேரத்திலும் இவரது மன உறுதியைக் காட்டி நின்றன. '' நீங்கள் எங்கள் அடிமைகள் '' என்ற ஏளனக் குரல்களுக்கு மத்தியில் நண்பகல் 12:30 மணியளவில் இரட்டைவாய்க்காலுக்கு அண்மித்த பகுதியில் இவரது உடலின் இசைவாக்கம் படிப்படியாக குறைந்து போக, இன்னும் சிலருடன் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் ஓர் உழவு இயந்திரத்தில் இவரும் ஏற்றப்பட்டு சாளம்பன் என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு மதியம் 2:45 மணியளவில் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில் அவரது இதயமும் தனது துடிப்பை நிறுத்த இவ்வுலகை விட்டு பரமனடி சேர்ந்தார். அருட் பணி சரத்ஜீவனின் உறுதியான மனநிலையும், இறைமகன் இயேசுவின் பாதையில் தன்னை பலியாக ஒப்புக் கொடுத்த நிகழ்வும் பணிக் குருத்துவத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை வரைந்து நிற்கின்றன.

அருட்பணி பிரன்சிஸ் யோசப் அடிகாளார்

இதே காலப் பகுதியில் பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி பிரன்சிஸ் யோசப் அடிகாளாரும் 50 வருட கால குருத்துவப் பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார். இறைவழியில் நின்று உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக் கொண்டார். காணாமல் போனோர் பட்டியலில் அவரது பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டு அவரது இருப்பு கேள்விக் குறியானாலும் தமிழரின் வரலாற்றில் அவர் தனித்துவமான ஒரு இடம் பிடித்தவர். இவ் அருட்பணியாளரின் வாழ்வில் சில பதிவுகள்:-

2009 மே 13ஆம் திகதி காலை நேரம், முள்ளிவாய்க்கால் பகுதி முழுவதும் ரணகளமாய் மாறியிருந்தது. திரும்பும் திசையெல்லாம் சடலங்களும், அங்கவீனர்களும், ஒபாரிகளும், கூக்குரல்களும், பற்றியெரியும் வாகனங்களும். 12ஆம் திகதி நள்ளிரவு தொடங்கி 13ஆம் திகதி அதிகாலை வரை நடத்தப்பட்ட பல்குழல், ஆட்லறி, கனன் எறிகணைத் தாக்குதல்களின் எச்சங்கள்தான் இவைகள். ஒரு சில மணித்தியாலங்களில் ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டும், கொல்லப்பட்டும் கிடந்தார்கள். அன்றைய தினம் மதிய நேரம், அருட்பணியாளர் பிரான்சிஸ் அடிகளாரை சந்திப்பதற்காக அவரின் பதுங்கு அகழிக்கு சென்ற போது அவருடன் அவரது பணியாளர்களும், கால் ஊனமுற்ற ஒரு பெண்ணும் இருந்தார். நாங்கள் உள்ளே இருந்து உரையாடிக் கொண்டிருந்த போது, மீண்டும் எறிகணைத் தாக்குதல்கள் சரமாரியாக மேற்கொள்ளப்பட, நாங்கள் இருந்த இடத்திலிருந்து ஒரு சில மீற்றர் தள்ளியிருந்த எண்ணைக் களங்சியம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. எங்கும் தீச்சுவாலை, அதன் வெக்கை உள்ளே இருந்த எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அப்போது கையில் கிடைத்த துணிகளைச் சுற்றி தண்ணீருக்குள் தோய்த்து உடல் வெக்கையை தணித்துக் கொண்டிருந்தோம். பதுங்கு குழியை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு எறிகணைகள் எம்மைச் சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன.

இதுதான் எங்களின் இறுதி சந்திப்பு என்பதை அன்று நான் உணரவில்லை. ஆனால் இன்று அது நிதர்சனமாக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பிரான்சிஸ் அடிகளார் பல விடயங்களை மனம் விட்டு பேசினார். உரையாடல் முடிவில் அவரை எங்களோடு வந்து இருக்கும் படி கேட்டபோது, அவர் இரண்டு காலும் ஊனமுற்ற பெண்ணைக் காட்டி, ''நான் உங்களுடன் வர ஆயத்தம் ஆனால், இந்த பெண்ணையும் கொண்டு வந்து உங்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை'' என்று உருக்கமாகவும் நிதானமாகவும் கூறிய வார்த்தைகளால் நாம் அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல விரும்பவில்லை. இவர் சுட்டிக் காட்டிய அந்தப் பெண் இவரிடம் ஆங்கிலம் பயின்ற ஒரு மாணவி. அந்தப் பெண்ணை பார்த்த போது, அவளுக்கு முன்னாலே நீலநிற பேசின் ஒன்றிற்குள்ளே இரண்டு பின்னங்கால்களையும் இழந்த அவரின் செல்லப் பிராணியான பூனைக்குட்டியும் காணப்பட்டது.

அடிகளார், கிளிநொச்சி அம்பாள் குளம் என்ற இடத்தில் பல வருடங்களாக இருந்து ஆன்மீக, சமூகப் பணி ஆற்றிக் கொண்டு இருந்தவர். தாய் நாட்டின் மீதும் , மக்களின் விடுதலை மீதும் அதீத ஆர்வம் கொண்ட இவர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னர் தமிழ் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் தன்னுடைய கல்வித்துறை அனுபவத்தாலும் போர்க்கால சமூக கட்டமைப்புக்குள் உருவாக்கப்பட்டிருந்த பல கல்வி சார்ந்த துறைகளில் தலைமைப் பதவிகளை வகித்தவர். வன்னியில் தமிழ் இளையோரினது ஆங்கில மொழி புலமைக்கு வித்திட்டு, நீண்ட நாள் கனவாகிய ஆங்கில மொழிக் கல்லூரியை 2004 கிளிநொச்சியில் பிறப்பெடுக்கச் செய்து தனது ஆங்கில மொழிப் புலமையினாலும், நீண்டநாள் கல்வித்துறை அனுபவத்தினாலும் இக்கல்லூரியை திறம்பட இயக்கி, ஆங்கில மொழிப் பட்டாதாரிகளை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.

கடின உழைப்பும், விடா முயற்சியும் கொண்ட இவர் மக்களின் வாழ்வியலின் துன்பமான வரலாற்றுத் தடங்களுடன் தன்னை இரண்டற இணைத்துக் கொண்டார். இடப்பெயர்வு என்ற போரியல் சுழற்சிக்குள்ளே தர்மபுரம், வள்ளிபுனம், உடையார்கட்டு, இரணைப்பாலை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் என பல்வேறு குறிச்சிகளை தாண்டி, போரின் இறுதிக்காலம் வரை துன்பப்படும் மக்களோடு இருந்தார். ஏழ்மையை வாழ்வாக்கியவர், உதவி என்று தேடிச் செல்வோரை அன்போடு அரவணைத்து மனம் கோணாமல் உதவி செய்வார். இவர் வள்ளிபுனம் பிரதேசத்தில் இருந்த போது குருத்துவத்தின் 50வது வருட நிறைவை உடையார்கட்டு தூய யூதாததேயு ஆலயத்தில் 2008 மார்கழி 21ஆம் திகதி ஏனைய குருக்களோடும், மக்களோடும் சேர்ந்து மிகவும் எளிமையான முறையிலே கொண்டாடினார். 50வருட குருத்துவ பயணத்தில் இறைவனின் துணையோடு வரலாற்றில் பல சாதனைகளை இவர் புரிந்திருக்கிறார்.

இடப்பெயர்வின் தாக்கம் இவரின் உடலிலும் பலவிதமான நோய்களை ஏற்படுத்தத் தொடங்கியது. உடல் பலவீனம், கண்பார்வை போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்தவராக, தனது இயலாமையிலும் உறுதியாக பல பணிகளைப் புரிந்தவர். எந்த வேளையிலும் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பாதவர். இவர் அகோர எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டு இறை துணையால் பாதுகாக்கப்பட்டவர். ஒருமுறை உடையார்கட்டு ஆலயத்தில் நாங்கள் ஒன்றாக இருந்தபோது எறிகணைத் தாக்குதலுக்குள் எல்லோரும் சிக்குண்டு இரவு வேளையில் சிதறி ஓடும் போது, கைத்தாங்கலாக இவரை அழைத்துச் சென்றது இன்னும் எனது நினைவில் உள்ளது. பல தடவைகளில் உந்துருளியில் இவரை அழைத்துக் கொண்டு நீண்ட பயணங்கள் செய்யும் போது, தான் நடந்து, கடந்து வந்த வாழ்வியல் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார். இவர் எமது கடந்தகால வரலாற்றை நன்கு அறிந்திருந்த இறை பணியாளர் என்பதை புரிந்து கொண்டேன்.

இவரது கண்களில் ஒன்று சத்திட சிகிச்சை செய்யப்பட்டு குணப்படுத்த வேண்டிய கட்டாய தேவை இக்காலப் பகுதியில் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேறினால் தான் மீண்டும் திரும்பி வர முடியாது போனால் தனது பணிகள் பாதிப்படையும் என்று நினைத்தவராக, ஆரம்பத்தில் மறுத்தாலும் காலப்போக்கில் இவரது பார்வை மேலும் மேலும் குன்றிப்போக பார்வையை இழக்க நேரிடும் என்ற அபாயத்தை உணர்ந்தவராக அங்கிருந்து வெளியேற விரும்பிய போது, அதற்கு ஏதுவான சூழ்நிலைகள் இவரின் பயணத்திற்கு சாதகமாக அமையவில்லை. இவரை அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக வெளியேற்றுவதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுத்த போதும் எதுவும் பயனளிக்கவில்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் நல் மனதோடு ஏற்றுக் கொண்டார்.

2009 மே 13ஆம் திகதி அவரை விட்டு நான் பிரியும் போது இனம் புரியாத பயம் ஒன்று எனது மனதில் இருந்தது. தனித்து விடப்படுகிறாரே என்று எனது உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வேளையில் ''கடவுளுக்குச் சித்தமானால் மீண்டும் ஒருமுறை சந்திப்போம்'' என்று அவரது வாயில் இருந்து வந்த வார்த்தைகள் என்னை சற்று ஆறுதல் படுத்தியது. அந்த இடத்திலிருந்து அவர் அன்றைய தினமே வெளியேறி இன்னுமொரு இடத்தில் பாதுகாப்பு தேடிய இவர் மே மாதம் 17ஆம் திகதி வட்டுவாகல் பாலத்தை தாண்டி பல இலட்சக்கணக்கான மக்களோடு இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் சென்றார். களைப்பு, சோர்வு அவரது உடல் இசைவாக்கத்திலே தளர்ச்சியை ஏற்படுத்த ஓர் மரநிழலின் கீழ் தன்னுடன் இருந்த தனது பணியாளர்களோடு இளைப்பாறிக் கொண்டிருந்தார். பலர் அவரை அடையாளம் கண்டு தங்களின் சோகங்களை அவரோடு பகிர்ந்து கொண்டனர்.

இவரின் பிரசன்னத்தை அங்கு கண்ட அரசியல் துறையைச் சேர்ந்த சிலர், மே 18 காலை வேளையில் இவரை அணுகிச் சென்று தங்களை அடையாளப்படுத்தி, இராணுவத்தினரிடம் சரணடைய தமக்கு உதவி புரியும் படி கேட்டுக்கொண்டார்கள். அடிகளாரின் ஆங்கில மொழிப்புலமை சரணடைதலுக்குரிய ஒரு சுமூகமான சூழ் நிலையை உருவாக்கும் என்பதையும், அவர் ஒரு குருவானவர் என்பதால் இராணுவத்தினர் இவருக்கு மதிப்பளிப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்கள். தாராள உள்ளத்தோடு மனம் கோணாமல் உதவி செய்யும் மனம் படைத்தவர் இவர், இதற்கு இசைந்து அதனை செயற்படுத்துவதற்கு இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டார். அவர்களும் சரணடைதலுக்கு சம்மதித்து சரணடைபவர்களின் பெயர் பட்டியலை ஆயத்தம் செய்யும் படி கேட்டுக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டுமே தங்களை அடையாளப் படுத்தினாலும், அடிகளாரின் அந்த முயற்சியை அறிந்த இன்னும் பலர் அங்கு ஒன்று கூடி குடும்ப சகிதம் தங்களின் பெயர் விபரங்களை அப்பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள். ஒரு சிலருடன் ஆரம்பித்த பெயர்ப் பட்டியல் மிகவும் நீண்ட பட்டியலாக மாறியது. இறுதியில் அந்த பெயர் பட்டியலை பெற்றுக் கொண்ட அதிகாரி, அவர்களுக்கென விசேட பேருந்து வண்டிகளை ஒழுங்கு செய்து, அவற்றில் ஏற்றிய பின்னர் அடிகளாரையும் அந்த போராளிகளோடு ஏற்றிச் சென்றார்கள். இந்த சம்பவங்களை பலர் கண்டுள்ளார்கள். அடிகளாரின் இருப்பு இப்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது. அடிகளாரோடு அந்த பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டவர்களின் பெயர்களும், காணாமல் போனோரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டு விட்டது.

இவ் அருட் பணியாளர்கள் சரத்ஜீவன், பிரான்சிஸ் யோசப் முள்ளிவாய்க்கால் என்ற, உலகப் பந்தில் ஒரு சிறு புள்ளியில் மக்களின் துன்பியலோடு தங்களின் இருப்பைக் கரைத்துக் கொண்டவர்கள். இறுதிக் காலத்திலும் இறைபிரசன்னத்தை மக்களுக்கு கொடுத்தவர்கள். காற்றோடும், கடலோடும், மண்ணோடும் கரைந்து போன பல்லாயிரக் கணக்கான மக்களோடும் தங்களின் வாழ்வையும் இணைத்துக் கொண்டவர்கள். வரலாற்றில் உங்களின் தடங்களை என்றும் நாம் நினைவில் கொள்வோம்.


FaceBook: Fr.Sarathjeevan Foundation

Email: frsarathjeevan@yahoo.com

Contact by post:

Fr. Sarathjeevan Foundation
P.O. Box 2,
Bishop's House,
Jaffna,
Sri Lanka