இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 12வது நினைவு தினம் 18-05-2021 அன்று நினைவுகூரப்படுகிறது. அவரது 53வது பிறந்த தினம் 13-05-2021 அன்றும் 18வது குருத்துவ தினம் 14-05-2021 லும் நினைவுகூரப்படுகின்றது. அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் நினைவாக சகோதரகுரு எழுதிய ஆக்கம் கீழே தரப்படுகிறது.
சறாக்குட்டி !! இப்படித்தான் சிறிய, பெரிய குருமடங்களில் இவர் அழைக்கப்பட்டார். அந்தப் பெயர் இவர் குருவாக வந்த பின்னும் தொடர்ந்தது… உடம்பு கொஞ்சம் பெரிது தான் மனமும் உணர்வும் குழந்தை தான்… முகம் கொஞ்சம் மொத்தம் தான்… செல்வாக்கான கண்கள் உண்டு… மொத்தத்தில் கொஞ்சம் ஒழுங்கற்ற உடம்பில் ஒழுங்கான அன்பின் படைப்பு… இது சறாக்குட்டியின் வெளித்தோற்றம். பிஞ்சு மனம் வெள்ளை உள்ளம் கொஞ்சும் மொழியில் கள்ளமில்லா வார்த்தைகள் மிஞ்சும் கலைத்துவம் கொள்ளை கொள்ளும் இசை ஆற்றல் கெஞ்சும் உணர்வுகள் வெள்ளம் போல வாழ்க்கைப் பாடம் அத்தனையும் ஒருங்கே அமையப்பபெற்ற அன்பின் வடிவம்.
ஞாபகப்படுத்தினேன்!!
ஒரு நாள் பெரிய குருமடத்தில்
விளையாட்டு விழா
இரண்டு இல்லங்கள் எட்றியன், பொன்னையா
சறாவும் நானும் எட்றியன் இல்லம் இன்னும் பலரோடு
வினோத உடை நிகழ்வு முதல் இடம் எடுக்க வேண்டும்
ஆயத்தப்படுத்தினோம் சறாவை இரண்டாம் வகுப்பு
பிள்ளை போல நீலக் காற்சட்டை, வெள்ளை சேட்டு,
அலுப்பினாத்தி குத்தி சேட்டிலே ஒரு லேஞ்சி
றிங்ஸ் போத்தலுக்குப் பதிலாக பெரிய பெப்சி போத்தல்
அதன் மூடிக்குப் பதிலாக சூப்பி ஒண்டு
சப்பாத்து மேசும் காலில் போட்டு
பின்னுக்கு கொழுவும் பாக்கு ஒன்றும்
விறகு கொண்டுவரும் வண்டிலில்
ஏற்றி வந்தோம் சறாவை பத்துப் பேர்
வண்டிலை இழுத்தும் வந்தோம்….
நடுவர்கள் விழுந்து சிரிக்க
சறாக்குட்டி சூப்பியாலே பெப்சி குடிக்க…
வினோத உடையில் எமது இல்லம்
பெற்றது முதலாம் இடம்!
ஞாபகப்படுத்தினேன்!!
எம் தொடர் உறவின் பயணத்திலே
2008ம் 2009ம் ஆண்டுகள்
மறக்க நினைத்தாலும் முடியாதவை…
அந்தக் கொடூரமான நாட்களின்
கசப்பான தருணங்களை எப்படி சொல்வது…
2008 நவம்பர் 01 ல்
சறாக்குட்டியை சந்தித்தேன்.
“பயப்படாதே இயேசு நம்மோடு இருக்கிறார்.
எமது இனத்தோடும், சனங்களோடும் இருக்கிறார்”
இது இவரின் முதல் வார்த்தை என்னைக் கண்டதும்
தெளிவான, தெம்பான வார்த்தைகளை
எப்போதுமே சொல்லி திடப்படுத்துவது
இவரின் பிறவிக்குணம்.
2009ல் உக்கிரமடைந்தது போர்…
வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் குண்டு மழை
படிப்படியாக நில ஆக்கிரமிப்பு
இறப்புக்களின் நிலை மிக அருகிலே இருந்தது…
எதுவும் செய்ய முடியாமல் தவித்த வேளை
வன்னி அகதிப்பணியின் இயக்குனரான இவர்
தன்னிடமிருந்த அத்தனையையும் மக்களோடு
பகிர்ந்து கொண்டார்.
இருந்தோம் இரணைப்பாலையில்
இருக்க முடியவில்லை
சாவுகளைக் கண்டு கண்டே
சலிப்படைந்து விட்டது உள்ளமும் மனமும்
சறாவுக்கு நானும் எனக்கு சறாவும்
அவஸ்தை கொடுத்துக் கொண்டோம்…
அப்போது கூட …
“பயப்படாதே இயேசு கைவிடமாட்டார்
நாங்கள் தோற்க மாட்டோம்”
இது தான் அவரின் வார்த்தைகள்…
பயங்கரங்கள் அருகிலே மிக அருகிலே தெரிய
இடம் பெயர்ந்தோம் வலைஞர் மடம் நோக்கி
அங்கே செபமாலை மாதா கோவில்
எல்லோரும் போய்ச் சேர்ந்தோம்…
சறாவும் நானும் ஒரு சிறிய தகரக் கொட்டில் போன்ற
ஒரு இடத்தில்…
ஒரு கட்டில், ஒரு பாய், உடுப்பு பாக்கே எங்கள் தலையணை,
சறா பாயுடன் கீழே நான் பாயில்லா பலகையில்
உறக்கமில்லாத இரவுகள்…
செபமாலையை கையிலே வைத்துக் கொண்டு
விழித்திருப்போம் எப்போதும்…
அப்போது தான்…
நான் ஞாபகப்படுத்துகின்றேன்!!
சறா அடிக்கடி நெஞ்சை பிடிப்பதை…
“என்ன சறாக்குட்டி நெஞ்சுக்க நோகுதா?”
என்று கேட்டேன்.
“இல்லையடா! நாங்க தோக்கப்ப போறம் போல கிடக்கு
சனமும் சாகுது, எங்களுக்கு ஒண்டும் இல்லாம
போகப் போகுதடா !!”
என்று கூறிக் கொண்டே தனது நெஞ்சைப்
பிடிப்பார் இதயப் பக்கத்திலே…
வெளுத்துப் போன கண்களுடனும்
களைத்துப் போன உடம்புடனும்
சளைத்துப் போன மனதுடனும்
சறாவைக் காண்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
இறுதியில் முடிவுக்கு வந்தது யுத்தம்
ஏராளமான மக்களைக் காணவில்லை
உயிரற்ற உடல்களினாலே நிரம்பியது வன்னி
பார்க்கும் இடமெங்கும் செத்துப்போன எம் உறவுகள்
கண்களை மூடிக் கொண்டு
நெஞ்சை அழுத்திப் பிடித்தோம்…
அப்போது தான் அந்த மாபெரும்
அன்பின் பொக்கிஷத்தை !!
சறாக்குட்டியை இழந்தோம்…
மக்களுக்காகவே வாழவும் சாகவும் துடித்த
அந்த மகான்…
தன் இனத்து மக்களோடு தன்னையும்
கiர்துக் கொடுத்தான்…
சரித்திரமானான்…
சறா…
நீ வாழ்கிறாய் எம் இதயத் துடிப்பில்
நீ வாழ்கிறாய் எம் விடுதலை உணர்வுகளில்
நீ வாழ்கிறாய் எம் தேசத்தின் தென்றல்களில்
நீ வாழ்கிறாய் எம் அன்பின் பயணங்களில்
நீ வாழ்கிறாய் எம் தியாகத்தின் இருப்புக்களில்
நீ எப்போதும் வாழ்வாய் எம் தமிழ் மொழியும்
இரத்த சாட்சிய திருச்சபையும் வாழும் வரை…
உன்னை ஞாபகப்படுத்தியது
நண்பன்
சகோதரகுரு
FaceBook: Fr.Sarathjeevan Foundation
Contact by post:
Fr. Sarathjeevan Foundation