Fr. Sarathjeevan

இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் மக்களுக்காக தன்னுயிர் ஈந்த அருட்தந்தை சறத்ஜீவனின் நினைவாக அருட்தந்தை சறத்ஜீவன் நிதித்திட்டம் 2013ம் ஆண்டு அவரது குடும்பஅங்கத்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

Sara

வரலாறு

மக்களுக்காக பணியாற்றும் போது தம் உயிரை இழந்த யாழ் மறைமாவட்டம் மற்றும் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தையர்கள் ஏழுவர். முள்ளிவாய்க்காலில் உயிர்பிரிந்த அருட்தந்தை சறத்ஜீவன் அடிகளாரும் இவர்களில் ஆறாவது அருட்தந்தையாவார்.

 • பிறந்தநாள்

  ஆசிரியர்களான திரு.. மனுவல் மரியாம்பிள்ளை, திருமதி கசில்டா மங்களநாயகி ஆகியோரின் மகனாக பொகவந்தலாவையில் 1968 மே மாதம் 13ம் திகதி சறத்ஜீவன் பிறந்தார்.

 • மாணவனாக

  தலைமன்னார், கட்டுக்காரன் குடியிருப்பு என்ற இடத்திற்கு பெற்றோர் ஆசிரிய இடமாற்றம் பெற்றுசென்றபோது 1969 - 1973 வரை அங்கு வளர்ந்தார் 1974 - 1987 காலப்பகுதியில் தரம் 1 தொடக்கம் உயர்தரவகுப்பு வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் கல்விபயின்றார். யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் குருளைச் சாரணராகவும், பின்னர் சாரணராகவும், சாரணதலைவராகவும் இருந்தார். பின்னர் 1990 முதல் 1993 வரை யாழ்ப்பாணம் தொழில் நுட்பகல்லூரியில் பொறியியல் வரைபடத்துறையில் கல்வி பயின்றார்.

  1978 - 1988 வரை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் பீடப்பணியாளராக பணிபுரிந்தார். 1978 - 1993 வரை யாழ் புனித மரியன்னை பேராலயத்தின் பாடகர் குழாமில் அங்கம்வகித்தார் அத்துடன் ஓகன் இசைவாசிப்பவராகவும் இருந்தார். யாழ் புனித மரியன்னை பேராலயத்தின் இளைஞர் உருவாக்கல் இயக்கதில் அங்கத்தவராக இருந்து பல வருடங்கள் பணியாற்றினார்.

 • குருமடத்தில்

  1993 மார்ச் 1ம் திகதி புனித மாட்டீனார் சிறிய குருமடத்தில் இணைந்து 1994 ஆகஸ்ட் 22 வரை குருப்பணிக்கு தன்னை ஆயத்தப்படுத்தினார். பின்னர் 1994 செப்ரெம்பர் 25ம் திகதி கொழும்புத்துறை, புனித பிரான்சிஸ் சேவியர் பெரிய குருமடத்தில் இணைந்தார். 1997ம் ஆண்டு தனது மெய்யியல் பட்டப்படிப்பையும் பின்னர் 2002 ல் இறையியல் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார்.

 • இறை பணியில்

  2002 நவம்பர் 07ம் திகதி தியாக்கோனாக யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களினால் திருநிலைப்படுத்தப் பட்டார். அதன்பின் பாசையூர் புனித அந்தோனியார் கோவில் பங்கிலும், அதனைத் தொடர்ந்து இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியிலும் தியாக்கோனாக பணிபுரிந்தார். 2003 - மே மாதம் 14ம் திகதி யாழ் ஆயர் அவர்களினால் குருத்துவ நிலைக்கு திருநிலைப்படுத்தப் பட்டார்.

  2003 மே மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரை யாழ்ப்பாணம் அடைக்கல அன்னை ஆலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாக அருட்தந்ததை பயஸ் அடிகளாருடன் பணியாற்றினார். 2003 டிசம்பர் தொடக்கம் 2005 பெப்ரவரி மாதம் வரை முல்லைத் தீவு புனித பீற்றர் ஆலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாக அருட்தந்ததை ஜேம்ஸ் பத்தினாதர் அடிகளாருடன் பணியாற்றினார்.

  இந்த காலப்பகுதியில் 2004 டிசம்பர் 26ம் திகதி சுனாமி அனர்த்தம் காரணமாக மாமூலை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு இடம்பெயர்ந்தார். பின்னர் செல்வபுரம் புனித அன்னாள் ஆலயத்திற்கு மாறிச்சென்றார். 2005 மார்ச் மாதம் பங்குத்தந்தையாக உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயப்பங்கிற்கு பொறுப்பேற்றார். அத்துடன் ஜெயந்திநகர், கோணாவில், யூனியன்குளம், கனகபுரம், 155ம் கட்டை, திருநகர், ஊற்றுப்புலம் ஆகிய உபபங்குகளையும் நிர்வகித்தார். அத்துடன் யேசுசபை அகதிப்பணிகளின் பொறுப்பாளராக கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேசங்களிற்கு பொறுப்பேற்று இறக்கும் வரை பணிபுரிந்தார்.

  தமிழ் மக்களிற்கு நிரத்தர அமைதிதீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆவணிமாதம் 2008ம் ஆண்டு அமைதியின் அரசி என்ற ஆலயத்தை செல்வாநகரில் அம்மக்களின் துணையோடு அமைத்தார்.

 • Sara

  பாலகனாக ...

 • Sara

  மாணவனாக ...

 • Sara

  இயேசு கிறிஸ்துவின் வழியில் ...

 • Sara

  இறை பணியில் ...

 • Sara

  மக்களுடன் முள்ளிவாயிக்காலில் ...

 • Sara

  மக்களுக்காக சாம்பலாகி ...

 • Sara

  சிலையாகி மக்களின் மனதில் ...

அவலத்தில் மக்களுடன்

போர்க்காலத்திலும் சுனாமியின் போதும் வட கிழக்கில் வாழ்ந்த மக்கள் அகதிகளாயினர். அனைத்தையும் இழந்தனர். அவர்களுடன் அருட்தந்தை சரத்ஜீவனும் ஒருவராக இடம் பெயர்ந்தார். அருட்தந்தை சறத்ஐPவன் ஒரு சிறந்த குருதி கொடையாளி. ஒவ்வொரு 6 மாதாகாலத்தில் அல்லது ஒவ்வொரு வருடமும் 1993ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக குருதி வழங்குவபராக இருந்துள்ளார். அத்துடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிரந்தர உறுப்பினராகவும் இருந்துள்ளார். Life Member of Sri Lankan Red Cross Society: ID serial no.B9/1-129/93 since the year 1993.

 • ஆரம்ப இடப்பெயர்வுகள்

  1995ம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வின்போது மக்களுடனும் பெரிய குருமடமாணவர்களுடன் மடுத்திருப்பதிக்கு இடம்பெயர்ந்து சென்றார். 1996ம் ஆண்டு திரும்பவும் கொழும்புதுறை புனித பிரான்சிஸ் சேவியர் பெரிய குருமடத்திற்கு வந்தார். 2000ம் ஆண்டு திரும்பவும் இடப்பெயர்வினால் பண்டத்தரிப்பு தியான இல்லத்திற்கு மீண்டும் இடம்பெயர்ந்து 2001ம் ஆண்டு திரும்பி வந்தனர்.

 • சுனாமியின் அவலம்

  2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் தனது ஆலயத்தில் திருப்பலியை நிறைவு செய்து இன்னுமொரு ஆலயத்துக்கு சென்ற வேளை இவரது மக்களையும் ஆலயத்தையும் சுனாமி அள்ளி சென்றது. திரும்பி வந்த இந்த பங்குத்தந்தையே அனைத்தையும் இழந்த மக்களுக்கும் பெற்றோரை இழந்த மக்களுக்கும் தந்தையானார்.

 • இறுதியாக முள்ளிவாயிக்காலில்

  2008ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் திகதியிலிருந்து வன்னியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக உருத்திரபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை 18 இடங்களிற்கு அவரது இறப்பு வரை இடம்பெயர்ந்து சென்றார். இடம் பெயர்ந்த சில இடங்கள் உருத்திரபுரம் -சுதந்திரபுரம் - கல்மடு - புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை - வலைஞர்மடம் - மூங்கிலாறு - உடையார்கட்டு - முள்ளிவாய்க்கால். இறுதி யுத்தத்தின்போது மக்களோடு இருந்து பணிசெய்து அவர்களுடனேயே இருந்தார். அவரது சகோதரியிடம் அவர் தொலைபேசி வழியாக சிலதடவைகள் தொடர்பு கொண்டிருந்தார். அவர் கூறியது “அக்கா நான் மக்களுடன் தான் இருப்பேன். அவர்கள் வெளியில் வரும்போது அவர்களுடன் தான் நான் வருவேன். என்னை வரும்படி ஆயரிடம் போய் கேட்கவேண்டாம்” என்றார். அருட்தந்தை சறத்ஜீவன் மக்களோடு இருப்பபேன் என்பதில் மிகவும் உறுதி கொண்டிருந்தார். 2009 மே மாதம் 18ம் திகதி மாலை 3.00 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

 • பட்டினியும் தாக்குதலும்

  இறுதி நாட்களில் போதுமான அளவு உணவோ, நீரோ கிடைப்பது அரிதாக இருந்தது. அத்துடன் கடைசி சில நாட்களாக உணவோ நீரோ முற்றாக கிடைக்கவில்லை அத்துடன் கடுமையான யுத்தம் காரணமாக பதுங்கு குழிக்குள்ளேயே நேரத்தை செலவிடநேர்ந்தது. 13 மே மாதம் 2009 ஆண்டு அருட்தந்தை சறத்ஜீவனின் 41வது பிறந்தநாள். அன்றுதான் கடைசியாக குடும்ப அங்கத்தவரோடு தொடர்புகொண்டார். அதிலும் ‘திருப்பலி ஒப்புக்கொடுக்க முடியவில்லை’ என்பதே அவரது கவலையாக இருந்தது. 14 மே மாதம் அவருடைய 6வது குருப்பட்ட நாளாக இருந்தது. பதுங்குகுழிக்குள் இருந்தே தனது கடைசிதிருப்பலியை நிறைவேற்றினார்.

 • Sara

  என்றும் நிலையாக ...

மறக்க முடியாத இறுதி நாள் - மே மாதம் 18ம் திகதி

யுத்தத்தின் கடைசி நாளில் மே மாதம் 18ம் திகதி, அருட்தந்தை சறத்ஜீவன், அவருடன் இருந்த சககுருக்களுடனும், அவர்களின் பொறுப்பிலிருந்த சிறுவர்களுடனும் மக்களுடனும் வெளியில் வந்தார்கள். அப்போது அங்கு நின்றவர்களால் நெஞ்சில் பலமாக தாக்கப்பட்டார். நான்கு மைல்களுக்கு மேல் அருட்தந்தை சறத்ஜீவன் அவருடன் இருந்த மக்களுடன் நடந்தே சென்றுள்ளார். இதன் போது யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளுக்கு ஊடாகவும் காயமடைந்த இறந்துபோன மக்களின் உடல்கள் ஊடாகவும் அவர் நடக்க நேரிட்டது. “என்னால் இதை தாங்கமுடியாமல் இருக்கு” என்று சொல்லியவாறே அருட்தந்தை சறத்ஐPவன் நடந்துசென்றார். ஒருகட்டத்தில் நெஞ்சுவலி தாங்கமுடியாமல் மயங்கிவிட்டார். அதன்பின் இரட்டை வாய்க்கால் எனும் இடத்திலுள்ள படையினரின் தற்காலிக மருத்துவ மனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அவரது உயிர் பிரிந்தது.

அவரது உயிரற்ற உடல் இரட்டை வாய்க்காலில் இருந்து வவுனியா வைத்தியசாலை, வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலியுடன் கொழும்பிற்கு எடுத்துவரப்பட்டு கொழும்பில் 26-மே மாதம் திருப்பலியின் பின் தகனம் செய்யப்பட்டது. அருட்தந்தை சறத்ஜீவன் இலங்கையில் முதன்முதலில் உடல் தகனம் செய்யப்பட்ட அருட்தந்தையாவார். அருட்தந்தை சறத்ஜீவனின் அஸ்தி பின்னர் விமானம் மூலமாக யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு திருப்பலியின் பின்னர் யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் 30ம் திகதி மே மாதம் 2009 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவாக

அருட்தந்தை சறத்ஜீவன் நினைவாக இரண்டு புத்தகங்கள் அவரது குருத்துவ தோழர்களினால் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளன. அவரது 1ம் வருட நினைவுநாளில் (18-05-2010) உருத்திரபுரம் பற்றிமா அன்னை ஆலயத்தில் நினைவுச்சின்னம் ஒன்று அவருடன் பயின்ற குருத்துவ சகோதரர்களினால் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன. ஓன்று மாங்குளத்தில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களாலும் மற்றயது புங்குடுதீவில் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. புங்குடுதீவிலுள்ள சறத்ஜீவன் தரிசனம் முன்பள்ளிக்கான நிரந்தர கட்டிடத்தை அமைத்துதர திரு. ஜோண்பிள்ளை அவர்கள் முன்வந்துள்ளார். அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அருட்தந்தை சறத்ஜீவன் நிதிதிட்டம் 2013ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அருட்தந்தை சறத்ஜீவனின் உயிருடல் அழிந்தாலும் அவரது உருத்திரபுரம் பங்கு மக்களும் அவர் பணியாற்றிய முல்லைத்தீவு மற்றும் ஏனைய மக்களும் அவரது குருத்துவ தோழர்களும் நண்பர்களும் அவரது தாயார், சகோதர சகோதரிகள், உற்றார் உறவினர் அனைவர் மனதிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆக்கியவர்:
அருட்தந்தை சறத்ஜீவனின் சகோதரி நித்திலா மரியாம்பிள்ளை

Contact by post:

Fr. Sarathjeevan Foundation
P.O. Box 2,
Bishop's House,
Jaffna,
Sri Lanka